Motivational Stories

Moral Stories

பொறுமையின் வெகுமதி | Motivational Stories in Tamil | patience | Stories for kids


ஒருவர் உணவருந்த ஹோட்டல் ஒன்றிற்கு சென்றார். அங்கு தனக்கு விருப்பமான உணவுகளை ஆர்டர் கொடுத்தார். 
 

சுமார் 20 நிமிடங்கள் கழித்து ஆண்களும் பெண்களுமாக 10 பேர் அவர் அமர்ந்திருந்த டேபிள் அருகே அமர்ந்தார்கள். தேவைக்கு ஆர்டர் கொடுத்தார்கள். சிறிது நேரத்திலே உணவு வந்தது. கூச்சலும் கும்மாளமுமாக உணவு உண்டார்கள்.

 

அதில் ஒருவர், இவருக்கு உணவு வராததை கவனித்து கிண்டலாக குறிப்பிட்டார். எனக்கு இந்த ஹோட்டலில் எல்லோரையும் தெரியும். அதனால் தான் வேகமாக உணவு  பரிமாறப்பட்டது நான் இங்கு பிச்சைகாரர்கள் போல் பொறுமை காக்க வேண்டாம் என்றார்.

 

இதை கவனித்த அவரால் பொறுக்க முடியவில்லை. ஆர்டரை வேண்டாம் என கூறி புறப்படலாம் என்று முடிவு செய்து ஊழியரை அழைத்தார். 

 

ஊழியர் அமைதியாக அவரிடம், ஐயா உங்களுடைய உணவு மிகவும் சிறப்பு வாய்ந்தது அதை எங்கள் தலைமை சமையல் நிபுணரே தயாரித்து கொண்டிருக்கிறார்.

 

அவர்களுக்கு வழங்கப்பட்ட  உணவு அவசரமாக, இங்கே பயிலும் மாணவர்களால் தயாரிக்கப்பட்டது. உங்கள் உணவை எங்கள் தலைமை சமையல் நிபுணர்கள் தயாரித்து கொண்டிருக்கிறார்கள். அவர் அமைதி ஆனார். பொறுமை காத்தார்.

 

சிறிது நேரத்தில் அவரது உணவு வந்தது. அதை 6 ஊழியர்கள் அவருக்கு பரிமாறினார்கள். மிகுந்த உயர்ரக உணவு அது. அவர் அதை ஆர்டர் கொடுக்கவில்லை. அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

 

அவர் ஹோட்டலில் நுழைந்த போதே அந்த ஹோட்டலின் அதிபர் அவரை பார்த்து விட்டார். அவர்கள் இருவரும் பள்ளி நண்பர்கள். எனவே அவருக்கு ஆச்சரியம் ஊட்டும் வகையில், அவர் ஆர்டர் செய்த உணவுக்கு பதில் மிக சிறந்த உணவை கொடுக்கும்படி ஊழியர்களுக்கு கட்டளையிட்டார்.

 

பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் வாயடைத்து போய் விட்டார்கள். அவர்களால் பேசவே முடியவில்லை. தங்களுக்கு ஏன் அத்தகைய சேவை கிடைக்கவில்லை? என்று தங்களுக்குள் வருத்தமாக பேசிக் கொண்டார்கள்.



இது தான் வாழ்க்கை.



சிலர் நம்மை பார்த்து நகைப்பார்கள். தாங்கள் தான் சிறப்பானவர்கள் என்று குத்திக் காட்டுவார்கள். கடவுள் தனக்கு செல்வமும் மகிழ்ச்சியும் கொடுத்திருக்கிறார் என்று நமது இயலாமையை சுட்டிக் காட்டுவார்கள். 

 

உங்களுக்கும் கூட வருத்தமாக இருக்கலாம். இவ்வளவு நாட்களாக உழைத்தும், பொறுமையாக இருந்ததற்கும் இன்னும் திருப்புமுனை வரவில்லையே என்று கவலைப்படாதீர்கள்.

 

இந்த உலகத்தின் அதிபர், காலம் உங்களுக்கு நல்ல ஒரு உணவு தர வேண்டும் என்று உங்களை காக்க வைத்திருக்கலாம். அதை தயார் செய்ய சிறிது நேரம் ஆகும்.

 

பொறுமையாக நம் கடமைகளை சரிவர செய்து நாம் காத்திருந்து தான் ஆக வேண்டும். அந்த  உணவு வரும் போது நம்மை கேலி செய்தவர்கள் வாயடைத்து போய் விடுவார்கள்.

 

கடவுளை நம்பி, உங்கள் வாழ்வை அனுபவிங்கள்.

 

 நமக்கு வர வேண்டியது, நமக்கு வந்தே தீரும். யாரும் தடுக்க முடியாது.


 

No comments:

Post a Comment