ஒரு நாள் அரண்மனையினுள் உள்ள பூங்கா வனத்தில் அக்பரும், பீர்பாலும் பல்வேறு விஷயங்கள் பற்றி மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தனர். பேச்சின் இடையில் அக்பருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது.
பீர்பால் அவர்களே! உலகத்தில் உண்மையானவை, பொய்யானவை என்று ஒரு விதமான விஷயங்கள் உள்ளன என்று பொதுவாக எல்லோராலும் பேசப்படுகிறது.
உண்மைக்கு நேர்மாறானச் செயல் பொய்யாகும் என்றாலும் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்து உண்மை என்பது என்ன? பொய் என்பது என்ன? இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? இதனைப் பற்றி தங்களால் விளக்க முடியுமா? என்றார்.
"முடியும் மன்னா! உண்மைக்கும் - பொய்க்கும் உள்ள இடைவெளி ஐந்து விரற்கடை அளவுதான்" என்று பதிலளித்தார் பீர்பால்.
"உண்மைக்கும் பொய்க்கும் தாங்கள் அளவு கோல் காட்டுவது மிகவும் விசித்திரமாக இருக்கிறது! சற்று விளக்கமாக எளிதில் புரியும் வகையில் விளக்கம் அளிக்கவும்" என்றார் அக்பர்.
"சக்ரவர்த்தி பெருமானே! நம்முடைய கண்களால் பெரும்பாலும் உண்மையைத்தான் பார்க்க முடியும். ஆனால் காதுகளினால் பொய்யைத்தான் அதிகளவில் கேட்க முடிகிறது.
ஆகையினால் கண்ணுக்கும் (உண்மை) காதுக்கும் (பொய்) உள்ள இடைவெளி ஏறத்தாழ ஐந்து விரற்கடை அளவுதான் இருக்கும்" என்றார் பீர்பால்.
பீர்பாலின் சாதுர்யமான பேச்சைக் கேட்டு மன்னர் மனம் மகிழ்ந்தார்.
No comments:
Post a Comment