ஒரு பெரிய குளம். அக்குளத்தில் அறிவாயிரவன். நூறறிவன் என்னும் மீன்களும் ஓரறிவன் என்னும் தவளையும் நண்பர்களாக இருந்தனர்.
ஒரு நாள் அக்குளக்கரைப் பக்கம் வந்த ஒரு செம்படவன் இக்குளத்தில் மீன்கள் அதிகமாகவும் பெரியவைகளாகவும் இருக்கின்றன. எனவே நாளை வந்து பிடிக்க வேண்டும் என்று கூறிப் போனான்.
அதைக் கேட்டுவிட்ட ஓரறிவானாகிய தவளை தன் நண்பர்களாகிய அறிவாயிரவன் நூறறிவன் இவர்களிடம் கூறியது. அத்துடன் வாருங்கள் நாம் வேறோர் இடத்துக்குச் சென்றுவிடலாம் என்றும் அழைத்தது.
ஆனால்,
அறிவாயிரவனோ "என் பெயர் என்ன தெரியுமா? ஆயிரம் அறிவினன்! எனக்கு நீர்க்கலை பல தெரியும். என்னை அவனால் பிடிக்க முடியாது. உனக்கு ஓரறிவு தானே; நீ வேண்டுமானால் போ" என்றது.
அதுபோல் நூறறிவனும் "நான் இவ்விடம் விட்டு வரமாட்டேன். எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும். நீ வேண்டுமானால் போய்க்கொள்" என்று கூறிவிட்டது.
ஆபத்தைக் கூறி அழைத்தாயிற்று; வராவிட்டால் என்ன செய்ய முடியும்? தவளை தன் சுற்றத்துடன் அக்குளத்தைவிட்டு வெளியேறிவிட்டது.
மறுநாள்,
செம்படவன் வந்தான். வலையை வீசினான். மீன்களைப் பிடித்தான். அவைகளைச் சுமந்தவாறு சென்றான்.
அவன் அப்படிச் செல்வதைக் கண்ட ஓரறிவனாகிய தவளை தன் மனைவிடம் "ஆயிரம் அறிவினனும் நூறு அறிவினனும் அதோபார், வலையில் அகப்பட்டு அழிவுக்கு ஆளாகிவிட்டார்கள். ஓர் அறிவினனாகிய நான் இதோ ஆபத்துக்கு அப்பாற்பட்டு மகிழ்ச்சியோடிருக்கிறேன்" என்று கூறி வருந்தியது.
No comments:
Post a Comment